Friday, March 7, 2008

சொந்த புத்தி தான் உதவும் சொல் புத்தி உதவாது

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுத் தேர்தலும், ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் நடைபெறும் பள்ளித் தேர்வும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஓராண்டு முற்றிலும் பாடங்களைச் சரியாகப் படித்தவர்களும், பாடங்களை மனத்தில் பதித்தவர்களும் தாங்கள் நினைத்தபடி பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். எதிர்கால வாழ்க்கையையும் நிச்சயித்துக் கொள்வார்கள். ஆனால் பள்ளிப் பாடங்களையே படிக்காமலும், புத்தகங்களைக் கூட தொட்டுப் பாராதவர்களும் தேர்வில் கோட்டை விடுவது திண்ணம்.

ஏன் உன் புத்தகத்தில் எல்லாம் சிவப்புக் கோடுகளாகவே உள்ளன?” என்று கேட்கும் தந்தையிடம், ஆசிரியர்களிடம் நீல நிற மை உள்ள எழுதுகோல் இல்லாமல் சிவப்பு மை எழுதுகோல் மட்டுமே இருந்ததால் இந்த நிலை என்று பதில் சொல்லும் மாணவர்கள் தங்களிடம் உள்ள அந்தப் புத்திக் கூர்மையைப் பாடம் படிப்பதில் செலுத்தி இருந்தால் எவ்வளவு நல்லது?

பள்ளித் தேர்வுக்கும் பொதுத் தேர்தலுக்கும் ஒரே ஒரு முக்கிய வேறுபாடு என்னவெனில், பள்ளித் தேர்வில் மாணவர்கள் மட்டுமே வெற்றி அல்லது தோல்வியைச் சந்திக்கின்றனர்; பொதுத் தேர்தலிலோ, வாக்காளர்களும் வேட்பாளர்களுமாக இரு தரப்பினரும் சேர்ந்து வெற்றியையோ, தோல்வியையோ அடைகிறார்கள் என்பதுதான்.

பள்ளித் தேர்தலில் ஓராண்டு வரை மாணவர்கள் மட்டும்தான் படிக்கின்றனர். பொதுத்தேர்தலிலோ, ஐந்து ஆண்டுகளுக்கு அந்தந்தத் தொகுதி வாக்காளர்களும், வேட்பாளர்களும் படிக்கின்றனர்.

பள்ளித் தேர்வில் படிக்காத மாணவர்கள் தோல்வி அடைவது போல, பொதுத்தேர்தலில் வேட்பாளர்களைச் சரிவரப் புரிந்து அல்லது அறிந்து கொள்ளாத வாக்காளர்களும், வாக்காளர்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளாத - அல்லது அறிய முற்படாத வேட்பாளர்களும் தோல்வியைக் காண நேருகிறது.

இந்தச் சிந்தனையோடுதான், பொதுத் தேர்தலில், சோதித்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று நாட்டு மக்களைப் பிரதமரும், அரசியல் கருவியாக இந்தியர்களைப் பயன்படுத்தாதீர் என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவும் கூறியிருக்கும் கருத்துகளை அணுகுவது நல்லது எனக் கருதுகிறோம்.

தம்முடைய கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பிரதமர் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நினைவூட்டலின் மூலம் தங்கள் தேசிய முன்னணி வேட்பாளர்கள் செய்த சேவைகளின் - தேர்வு ரீதியில் சொன்னால் - படித்த பாடங்களின் பட்டியலைப் பிரதமர் மக்களிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

அதுபோலவே கடந்த மூன்றரை ஆண்டுகளில் தேசிய முன்னணி அரசு தங்களுக்குச் செய்த சேவைகளை அனுபவித்தும், பார்த்தும், கேட்டும் மக்கள் நிச்சயம் அறிந்திருக்கத்தான் வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் நாடும் மக்களும் பொதுவாக அடைந்திருக்கும் வளர்ச்சியையும் மலர்ச்சியையும் தெரிந்து கொண்டிருப்பதில் தவறு செய்து விட்டால், பாடங்களைப் படிக்காத மாணவர்கள் தேர்வில் அடைந்த தோல்வியையே அந்தந்தத் தொகுதி வாக்காளர்களும் அடைய வேண்டிய பரிதாப நிலை ஏற்படும்.

தேர்தலில் வாக்களிக்கும்போது ஑சொந்த புத்தியைக்ஒ கொண்டே முடிவு செய்ய வேண்டும் ஑சொல் புத்தியைக்ஒ கொண்டு வாக்களிப்பது சரியாகாது.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதற்காக வாக்களிக்காமல், தங்கள் கருத்துக்கும் கண்ணுக்கும் முன்னே தெரிகின்ற நாட்டு வளர்ச்சியை எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டியது வாக்காளர்களின் பொறுப்பாகும்.

பிரதமர் கூறியபடி பொதுத் தேர்தலைச் சோதனைக் கூடமாக்கி விடாமல் இருப்பதை வாக்காளர்கள் உறுதி செய்தால் நல்லது. அதுபோலவே தங்களை ஒரு கருவியாகவும் கறிவேப்பிலையாகவும் பயன்படுத்திக் கொள்ள யாரையும் இந்தியர்கள் அனுமதிக்கக்கூடாது என்னும் மஇகா தேசியத் தலைவரின் கருத்தையும் இந்தியர்கள் மறக்கக்கூடாது என்றும் நினைவுபடுத்துகிறோம்.

ன்றாகப் படித்த மாணவர்கள் போல, நாட்டின் நிலையை நன்றாக அறிந்து வாக்களிக்கும் இந்தியர்கள்தாம் தங்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மொத்தத்தில்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு (425)

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (355)

என்று வள்ளுவப் பெருமான் கூறியுள்ள கருத்துகளுக்கு ஏற்ப, யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் தெளிவாகச் சிந்தித்துத் தனி மனித நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஒட்டு மொத்த இந்தியச் சமுதாய நலனுக்கு முதன்மை கொடுத்து இந்தியர்கள் வாக்களிப்பார்கள் என்பதே நம் நம்பிக்கை.


தளுவள் மலேசிய நண்பன்