Friday, October 17, 2008

அறிவுடைய பிள்ளைகளை உருவாக்குவதில் தாயே முதன்மை வகிக்கிறாள்

நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகிறாள். பொய், தவறு செய்தால் அன்பால் திருத்துகிறாள். மரியாதைச் சொல்லித் தருகிறாள், பெரியவர்களை மதிக்கச் சொல்லித் தருகிறாள். கல்வியை சிறு வயதிலேயே கற்றுத் தருகிறாள். தன்னம்பிக்கையை ஊட்டுகிறாள், தைரியத்தை வெளிப்படுத்துகிறாள்.

இப்புவியில் பிறந்த அனைத்து உயிருள்ள ஜீவராசிகளுக்கும் தாய் என்பவள் கண்டிப்பாக இருப்பாள். அம்மா என்று அழைக்காமல் எந்தவோர் உயிரும், இல்லை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதற்கேற்ப தாயை விட இந்த உலகில் வேறு எந்தத் தெய்வமும் இல்லை. அவளுடைய அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் எவ்வளவு படித்தவராக இருந்தாலும் எவ்வளவு சொத்து வைத்திருப்பவராக இருந்தாலும் சரி, இவையனைத்தும் தாயின் அன்புக்கு ஈடாகுமா? 10 மாதம் நம்மைச் சுமக்கையில் அவள் பட்ட துன்பம் வெறும் வார்த்தையால் சொல்லித் தீர்க்கின்ற துன்பம் இல்லை. பிள்ளையைப் பெற்று எடுத்தவுடன் அவளுடைய கடமை தீரவில்லை. சுமந்தோம் பெற்றோம் என இல்லாமல், ஞானம் நிறைந்த பிள்ளைகளை உருவாக்குவதில் அவளே முதன்மை வகிக்கிறாள்.

ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கும் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவதற்கும் மற்றும் அறிவாளியாகத் திகழ்வதற்கும் முதல் காரணம் அவர்களை 10 மாதம் ஈன்றெடுத்த தாய்தான். ஒரு தாய் தன் பிள்ளைக்கு முதன் முதலில் கற்றுத் தருவது நல்லொழுக்கமாகும். நல்லொழுக்கம் என்றால் திருடாமல், பொய் சொல்லாமல் இருப்பதுதான். எந்தவொரு தாயும் தன் பிள்ளைக்கு திருட்டும் பொய்யும், மற்றவர்களை ஏமாற்றுவதும் சொல்லித் தரமாட்டாள். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொ௞க்கு ஏற்ப, சிறு வயதிலேயே பொய்யும் திருட்டும் இருந்தால், அது பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தொடரும். அவர்கள் மடியும் வரை தொடரும். இதுதான் ஒரு தாய் தன் பிள்ளைக்கு ஆற்றும் நன்மையா? கண்டிப்பாக இல்லை. நல்லொழுக்கத்தைப் பேணிக்காத்த மாணவர்களே பிற்காலத்தில் அறிவாளியாகத் திகழ்வார்கள்.

அதன் பிறகு, ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறுவயதிலிருந்தே மரியாதையைச் சொல்லித் தருவாள். மற்றவர்களை மதிக்கவும் மரியாதையாக பெரியவர்களிடம் பேசவும் கற்றுத் தருவார். ஓஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?ஔ என்ற பழமொ௞க்கேற்ப சிறுவயதிலேயே தாய் பிள்ளைகளுக்கு மரியாதையைப் பற்றிக் கற்றுத் தரவில்லை என்றால், அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும் மற்றவர்களிடம் மரியாதையாகப் பேச மாட்டார்கள். மரியாதை, பணிவு மற்றும் பக்தியும் உள்ள பிள்ளைகள்தான் பிற்காலத்தில் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள்.

ஒரு பிள்ளை தவறு செய்தால், அதை அன்பால் கண்டிப்பாள் தாய். அன்பால் அந்தப் பிஞ்சு மனதில் உள்ள கெட்டதை வெளியாக்குவாள் தாய். ஒவ்வொரு பிள்ளையும் வளர்ந்து படிக்கும் காலத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக உள்ளவர் தாய். ஒரு தாய் பிள்ளைக்கு சோற்றை மட்டும் பிசைந்து ஊட்டவில்லை. தன்னம்பிக்கையையும் சேர்த்துதான் ஊட்டுகிறாள். ஒவ்வோர் ஆணுக்கும் வெற்றியின் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோல், ஒவ்வொரு பிள்ளையின் வெற்றிக்குப் பின்னால் அவனுடைய தாய்தான் இருப்பாள்.

முயற்சியை மூச்சுப்போல் சுவாசிக்கச் சொல்வாள். எப்பொழுதும் சாதனை யையும் வெற்றியையும் அடைய வேண்டும் என்பாள். தோல்வி கண்டால், தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்று சொல்லி ஆறுதலாகவும் தன்னம்பிக்கை யாகவும் இருப்பவள் தாய். ஆகவே, தாயின் ஆக்கமும் ஊக்கமும்தான் ஒவ்வொரு பிள்ளையும் அறிவாளியாகச் சிறந்து விளங்க முடிகின்றது.

அதுமட்டுமின்றி, ஒரு தாய் தன் பிள்ளைக்கு மார்பில் பாலை ஊட்டும்போது அவள் தன்னம்பிக்கையையும் சேர்த்து ஊட்டுகிறாள். தைரியத்தையும் சேர்த்து ஊட்டுகிறாள். நல்லதையே பார்க்கச் சொல்வாள், நல்லதையே கேட்கச் சொல்வாள் மற்றும் நல்லதையே பேசச் சொல்வாள். அவள்தான் தாய். தாயின் சொற்படி கேட்டு, அவளின் சொல்லே தெய்வவாக்கு என்று எண்ணி எந்தப் பிள்ளையும் செயல்பட்டால் அவன் கண்டிப்பாக அறிவுடைய பிள்ளையாகத்தான் திகழ்வான். எந்தப் பிள்ளையும் மண்ணில் பிறக்கையில் நல்ல பிள்ளைதான். அவன் நல்லவனாக ஆவதும் தீயவனாக ஆவதும் தாயின் வளர்ப்பில்தான் இருக்கின்றது.

ஆகவே, அறிவுடைய பிள்ளைகளை உருவாக்குவதில் தாயே முதன்மை வகிக்கின்றாள். எந்தப் பிள்ளையும் தாய்ச்சொல் மிக்க மந்திரமில்லை என்று கருதினால் வாழ்க்கையில் வெற்றியைக் காண முடியும். அதே சமயத்தில் எந்தவொரு பிள்ளையும் தாயை உதாசீனப் படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தைத்தான் காண முடியும். தாயாக இருந்து அவள் ஆற்றும் சாதனைதான் எத்தனை? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் ஒவ்வொரு தாய்க்கும் பிள்ளைகள் பட்ட கடன் தீரவே தீராது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோர் எனக் கேட்ட தாய் என்ற திருக்குறளுக்கு ஏற்ப ஒவ்வொரு மகனும் தாயை பெருமையடையச் செய்ய வேண்டும்.

-தமிழரசி -

தளுவள்: மலேசிய நண்பன்