Saturday, August 18, 2007

Micro Thodargal Macro Sinthanaigal (Part 1 - 3)

1. நட்பு

கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருநாள் ஒரு நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
"முன்பே காப்பான் அன்பே நட்பு"


2. தேவை

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
'ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?"
தாய்க்குருவி சிரித்தது.
'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை'
என்றது தாய்.
தாய்க்குருவி சொன்னது:-
'வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்'


3. மழை

'வழங்கும் வானமே நீ வாழ்க"
என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.
காற்றுக்குச் சினம் பொங்கியது.
'என்ன கொடுமை! வானமா வழங்கியது?"
பூமிக்காகக் காற்று பொருமியது:-
"நீர் கொடுப்பதோ பூமி பேர் எடுப்பதோ வானம்"

No comments: