Saturday, August 18, 2007

Micro Thodargal Macro Sinthanaigal (Part 4 - 5)

4. புடம்

காட்டில் இருந்த மூங்கில் ஒரு நாள் கத்தியால் வெட்டப்பட்டது. நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது 'ஐயோ" உடல் புண்ணாகிறதே..." என்று கதறி அழுதது.
'கொஞ்சம் பொறுமையாக இரு.." என்று மூங்கிலைப் பார்த்து ஆறுதல் சொன்னது காற்று.
மூங்கில் புல்லாங்குழல் ஆனது.
மேடையில்...
உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த புல்லாங்குழலைப் பார்த்து மேனி சிலிர்த்தது காற்று.
அது சொன்னது -
'புண்பட்டவன்,பண்பட்டவன்."


5.நிறைவு

நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.
'எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஒரு கல்தானே..." என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது:-
'ஏ குறுணி! காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால், இரத்தினக்கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும்வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது..."
'அப்படியென்றால்..?" என்று இழுத்தது குறுணிக்கல்.
கடப்பாரை சொன்னது:-
'நிறைவாகும்வரை மறைவாக இரு'.



No comments: